தமிழ்நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்களுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு கோரி அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்துள்ளன.
இதேபோல, புதுச்சேரியிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்களுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பும்போது, மாநிலத்தில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என புதுச்சேரி திமுக அமைப்பாளரும், எம்எல்ஏவுமான சிவா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ”புதுச்சேரியில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி உள்பட எட்டு மருத்துவக் கல்லூரிகளும், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி உள்பட நான்கு பல் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. புதுச்சேரியில், பட்டியலினத்தவர்களுக்கு 16 விழுக்காடு, பழங்குடியினத்தவர்களுக்கு 0.5 விழுக்காடு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 11 விழுக்காடு, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு 2 விழுக்காடு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2 விழுக்காடு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 18 விழுக்காடு, பிற்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கு 0.5 விழுக்காடு என 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படுகின்றன.
இந்த இடஒதுக்கீட்டு முறையை புதுச்சேரியிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு அமல்படுத்த மறுப்பது என்பது சமூகநீதியை மறுப்பதற்குச் சமம். சட்ட அந்தஸ்து பெற்ற புதுச்சேரி இடஒதுக்கீட்டு கொள்கையை அமல்படுத்தாமல் மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்துவதற்குத் தடைவிதிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.