புதுச்சேரி சட்டப்பேரவைக்கு கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், நெடுங்காடு தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சந்திரா பிரியங்கா, 8,789 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாரிமுத்து 7,695 வாக்குகள் பெற்று 1,094 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இதையடுத்து சந்திரா பிரியங்காவின் வெற்றியை எதிர்த்த மாரிமுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குத் தொடர்ந்தார்.
அதில், சந்திரா பிரியங்கா திருமணம் முடிந்து திருச்சியில் வசித்து வருவதாகவும், அவர் குடும்ப அட்டை, இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்துச் சான்றிதழ்களையும் திருச்சியில் பெற்றுள்ள நிலையில், போலியான சான்றிதழ்களைத் தாக்கல் செய்து புதுச்சேரியில் தேர்தலை சந்தித்ததால், அவரின் வெற்றியை செல்லாது எனவும் அறிவிக்கக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு, சந்திரா பிரியங்கா தேர்தலுக்காகத் தாக்கல் செய்த சான்றிதழ்கள் போலியானவை அல்ல என்பது உறுதியாகியுள்ளதாகக் கூறி, மாரிமுத்து தொடர்ந்த தேர்தல் வழக்கைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: புதுவை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு