ஆம் ஆத்மி கட்சி தொடங்கியதில் இருந்து புதுச்சேரி மாநில தலைவராக ரங்கராஜன் இருந்து வந்தார். புதுச்சேரியின் ஆம் ஆத்மி வேட்பாளராக 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு இவர் தோல்வி அடைந்தார். மக்கள் பிரச்னைக்காக பல்வேறு போராட்டங்களை அரசுக்கு எதிராக முன்நின்று இவர் நடத்தினார்.
தென் மாநிலங்களில் தனது கட்சிப் பணியில் ஆம் ஆத்மி ஆர்வம் காட்டாத நிலையில் புதுச்சேரியிலும் அக்கட்சியின் செயல்பாடு முடங்கியது. ரங்கராஜனும் தனது கட்சி நடவடிக்கையில் இருந்து ஒதுங்கி இருந்தார்
இந்நிலையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றதும் அக்கட்சியில் இணைய ரங்கராஜன் திட்டமிட்டார். அதன்படி இன்று புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற இணைப்பு விழாவில் பாஜக மாநில தலைவர் சாமிநாதன் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் கட்சியில் தன்னை ரங்கராஜன் இணைத்துக் கொண்டார்.
ரங்கராஜன் பாஜகவில் இணைந்தார் முன்னதாக ஆம் ஆத்மி கட்சியின் புதுச்சேரி பொறுப்பாளர் சோம்நாத் பாரதிக்கு தனது ராஜினாமா கடிதத்தையும் ரங்கராஜன் அனுப்பி வைத்துள்ளார். புதுச்சேரியில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
.