புதுச்சேரி அருகே உள்ள வில்லியனூரில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தூய லூர்து அன்னை திருத்தலம் அமைந்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள லூர்து நகருக்கு அடுத்தபடியாக, லூர்து மாதாவிற்கென உலகில் கட்டப்பட்ட இரண்டாவது ஆலயம் வில்லியனூர் மாதா ஆலயம் ஆகும். இத்தகைய சிறப்புமிக்க தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகை முடிந்த வாரத்தின் சனிக்கிழமையான இன்று ஆண்டுப்பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புதுச்சேரி லூர்து மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - ஈஸ்டர் பண்டிகை
புதுச்சேரி: கொடியேற்றத்துடன் தொடங்கிய வில்லியனூர் மாதா திருத்தலத்தின் ஆண்டுப் பெருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையொட்டி காலை 5.30 மணிக்கு புதிதாகக் கட்டப்பட்டுள்ள அருள்நிறை ஆலயத்தில் உதகை மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து கூட்டுத் திருப்பலியை நிறைவேற்றினர். இதனைத் தொடர்ந்து மாதா குளத்தை சுற்றி திருக்கொடி பவனி நடைபெற்றது. பின்னர் ஆலய முற்றத்தில் உள்ள கொடிமரத்தில் ஆயர் அமல்ராஜ் கொடியேற்றி வைத்தார். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மே மாதம் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஆடம்பரத் திருவிழா தேர் பவனி நடைபெற உள்ளது.
சில நாட்களுக்கு முன் இலங்கை தேவாலயத்தில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலை அடுத்து, அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.