புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு வரும் 21ஆம் தேதி முதல் பருவத் தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுகளை ஆன்லைன் மற்றும் ஆஃப் லைனில் எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இணைப்புக் கல்லூரிகளுக்கு புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 'பருவத் தேர்வுகளில் நேர்மையாகவும் மாணவர்கள் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கும் வகையில், இணைப்புக் கல்லூரிகளில் இறுதி ஆண்டுத் தேர்வுகள் ஆன்லைன் மற்றும் ஆஃப் லைன் அல்லது இரண்டும் கலந்த முறையில் நடத்தப்படுகிறது.
பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதலின்படி, இணைப்புக் கல்லூரி மாணவர்களின் இறுதி பருவத் தேர்வின்போது புத்தகம் குறிப்பேடு அனுமதிக்கப்படுகிறது. இது கேள்விகளுக்கான பதில்களை புரிந்து கொண்டு எழுத வழிவகை செய்யும்.
மாணவர்கள் கருத்தாக்கத்தைப் புரிந்து கொண்டு பதில் அளிப்பதற்கு ஏற்றவாறு மதிப்பெண்கள் வழங்கப்படும். மாறாக அதனை அப்படியே எழுதுபவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படாது.