புதுச்சேரி காங்கிரஸ் அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அவர் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
அவர் தனது தொகுதியான வில்லியனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆதரவாளர்களுடன் நேற்று(ஜன-23) திடீரென ஆலோசனை நடத்தினார். முன்னதாக, ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து செய்தியாளர்களை வெளியேறுமாறு கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது, "காங்கிரஸ் கட்சியில் உரிய மரியாதை தனக்கு அளிக்கப்படவில்லை. தனது துறைகள் மீதான பணிகளில் முதலமைச்சர் தலையிட்டு வருகிறார். தனது தொகுதிக்கும், ஆதரவாளர்களுக்கும் எவ்வித பணிகளையும் செய்யவிடாமல் முட்டுக்கட்டை போடுகிறார். இதனால் கட்சியில் இருந்து வெளியேறலாம் என முடிவு செய்துள்ளேன். அரசியலில் இருந்தும் விலகலாம் என நினைக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
அப்போது ஆதரவாளர்கள், 'வேண்டாம்' என கோஷமிட்டனர். 'விரைவில் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மாற்று அரசியல் நிலைப்பாட்டை எடுக்கலாமா' என கேட்டார். அதற்கு, அனைவரும் ஒப்புக்கொண்டு 'உங்கள் முடிவுக்கு கட்டுப்படுவோம்' என கோஷமிட்டனர். அதையடுத்து, ஆதரவாளர்கள் கூட்டம் அரைமணி நேரத்தில் முடிந்தது.
கூட்டம் முடிந்து வெளியே வந்த அமைச்சரிடம், 'ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனை ஏன்' என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, 'நான் தொடர்ந்து தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன்'' என்றார். 'நீங்கள் பாஜகவுக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறதே அது உண்மையா என்ற கேள்விக்கு, 'இதுவரை அதுபோன்ற நிலைப்பாடு இல்லை' என்றார்.