உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் கோவிட்-19 பெருந்தொற்று இந்தியாவின் பல மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இந்த வைரஸ் பெருந்தொற்றால் சுமார் 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டும், 824 பேர் உயிரிழந்தும் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்க மத்திய - மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.
இந்தப் பணிகளில் காவல் துறை, சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, பள்ளிக் கல்வித் துறை என அனைத்துத் துறைகளும் ஈடுபட்டு வருகின்றன. இதில் தன்னார்வலர்களும் இணைந்து தங்களால் ஆன பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வைரஸ் பெருந்தொற்று தீவிரமடையும் முன், பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள புதுச்சேரி அரசு அறிவித்திருந்த ஊரடங்கை மே 3ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக விளிம்புநிலை மக்கள் பெரும்பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, உற்றார் உறவினர்களால் புறக்கணிக்கப்பட்டு பஸ் ஸ்டாண்டிலும், ரயில் நிலையத்திலும் பிச்சை எடுத்து சாலையோரங்களில் வாழ்வை நடத்தி வந்த முதியவர்கள், பிச்சைக்காரர்களின் வாழ்வு பெரும்சிக்கலுக்குள்ளாகி நின்றது.
இந்நிலையில், அவர்களை புதுச்சேரி அரசு சார்பில் மெஷின் வீதியிலுள்ள அரசு பள்ளி, கோரிமேடு உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காப்பகங்களில், தங்க வைத்து பராமரித்து வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது.
இதற்கிடையே ஊரடங்கு உத்தரவால், தொடர்ந்து ஒரே இடத்தில் அகப்பட்டிருப்பதாக உணர்ந்த அவர்கள் அரசு முகாமில் தங்குவதற்கு விருப்பமில்லாமல், நேற்றுமுன் தினம் முகாமை விட்டு தப்பித்து வெளியேறினர்.
தப்பியோடிய யாசகர்களை மீண்டும் முகாமுக்கே அனுப்பி வைத்த புதுச்சேரி காவல் துறையினர்! இதுகுறித்து புதுச்சேரி காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து ஆய்வாளர் சஜித் தலைமையிலான காவல் துறையினர் அடங்கியகுழு, தொண்டு நிறுவனமொன்றின் உதவியுடன் நேற்று இரவு முழுவதும் புதுச்சேரி பழைய பேருந்து நிலையம், புசி வீதி உள்ளிட்ட நகரின் பகுதிகளில் ஆங்காங்கே சுற்றித்திரிந்த பிச்சைக்காரர்களை அழைத்து, அறிவுரை கூறி, மீண்டும் தற்காலிக காப்பகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க :கரோனா பாதித்தவர்களை ஒதுக்காமல் இயல்பாக நடத்துங்கள்!