புதுச்சேரி அருகே உள்ள நல்லவாடு, வீராம்பட்டினம் மீனவர்களுக்கு இடையே சுருக்குவலை பயன்படுத்துவது தொடர்பாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நல்லவாடு மீனவ கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த மீன்பிடி வலைக்கு வீராம்பட்டினம் மீனவர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
கலவரம் உருவாவதைத் தடுக்கும் பொருட்டு இரு கிராம மீனவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இருகிராம மீனவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இரு கிராம மீனவர்களும் கடுமையான ஆயுதங்களுடன் கடற்கரையில் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக்கொண்டனர். மீனவர்களிடையே ஏற்பட்டுள்ள கலவரத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு, கண்ணீர் புகை குண்டு வீசியும் கூட்டத்தைக் கலைத்தனர்.
ரோந்து பணியில் காவல் துறையினர் இன்று தவளக்குப்பம் காவல் துறையினர், வீராம்பட்டினம் கிராம மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நல்லவாடு கிராம மக்கள் 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோன்று நல்லவாடு கிராம மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வீராம்பட்டினம் கிராம மக்கள் 300 பேர் மீதும் என மொத்தம் 600 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து இரு கிராம மீனவர்களிடையே பதட்டம் நிலவியதால் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் கடலோரத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மோதல் காரணமாக இரு கிராம மக்களிடையே சமாதானக் கூட்டம் நடத்தும்வரை மீன்பிடிக்க கடலுக்குள் செல்லக்கூடாது என காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.
மேலும் படிக்க: 'நடுக்கடலில் மோதல், மூவருக்கு கத்திக்குத்து, வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு' - பரபரப்பான புதுச்சேரி!