உலகளவில் பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்திவரும் கோவிட்-19 பெருந்தொற்று நோய் கடந்த 25 நாள்களாக இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவில் இரண்டாம் கட்ட நிலையை அடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 3 ஆயிரத்து 981 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 149 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா பரவலைத் தடுக்கும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள புதுச்சேரியில் ஏப்ரல் 14ஆம் தேதிவரை முழுமையான ஊரடங்கு உத்தரவை புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி பிறப்பித்தார்.
இதன் காரணமாக, புதுச்சேரி கடற்கலை கிராமங்களில் உள்ள முதியவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருவதாக புதுச்சேரி அரசுக்கு தொடர்ந்து தகவல் வந்துள்ளது. குறிப்பாக, புதுச்சேரி தவளக்குப்பம் பகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் ஏராளமான முதியோர் தனிமையில் இருப்பதாக தவளக்குப்பம் காவல் துறையினரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, தவளக்குப்பம் காவல் துறையினர் அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளனர்.
அதன்படி, அவர்களுக்கு மருந்து, அத்தியாவசியமான உணவுப் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்க முடிவு செய்து, அதற்கான நோட்டீஸ்களை முதியோர்களிடம் வழங்கினர்.
இதையும் படிங்க :விவசாயிகள் கொள்முதல் செய்யும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் - முதலமைச்சர் அறிவிப்பு