புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கவுள்ள நிலையில் புதுச்சேரி முழுவதும் பாதுகாப்பு பணிக்கு 1,500 காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவாக பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் புத்தாண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ள முதலமைச்சர் நாராயணசாமி காவல்துறை உயரதிகாரிகள் கூட்டத்தை இன்று கூட்டினார். புதுச்சேரி சட்டப்பேரவை கமிட்டி அறையில் நடந்த இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அருண், காவல்துறை இயக்குநர் பாலாஜி ஸ்ரீவத்ஸவா, உள்ளாட்சித் துறை அலுவலர்கள், ஆணையர்கள், மாநகர முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்திற்கு பின்னான செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாராயணசாமி, புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எவ்வித இடையூரும் தரக்கூடாதென்று காவல்துறையிடம் தான் தெளிவுபட கூறியுள்ளதாகவும் சுற்றுலாத்துறை மூலம் புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் கடற்கரை, புதுச்சேரி கடற்கரை படகு குழாம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.