பரபரப்பான சூழ்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவைச் சிறப்புக் கூட்டம் சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் இன்று காலை 9:30 மணிக்குத் தொடங்கியது. திருக்குறள் வாசிப்புடன் தொடங்கிய சிறப்புக் கூட்டத்தில், மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் புருசோத்தமன், ராமநாதன் ஆகியோர் மறைவிற்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன.
தொடர்ந்து அனைத்துச் சட்டப்பேரவை உறுப்பினர்களும் பேரவையில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் தீர்மானங்களைக் கொண்டுவந்தார். அப்போது பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடும் கூச்சல் எழுப்பி, அதன்பின் பேரவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு மேலும் என்ஆர் காங்கிரஸ், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இன்று குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றைத் திரும்பப்பெற வேண்டும், காரைக்கால் மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தல், இந்தியாவிலுள்ள தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கு சமூகநீதியை நிலைநாட்டும் வகையில் இடஒதுக்கீடு கொள்கை அறிமுகப்படுத்தல், 70ஆவது இந்திய அரசியலமைப்புச் சட்ட நாள் கொண்டாட வேண்டும் ஆகிய நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
இதற்கிடையே வெளிநடப்பு செய்த பாஜக உறுப்பினர் சாமிநாதன் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளருக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. பின் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு, 78 சதவீதம் நாட்டு மக்களின் ஆதரவையும் பெற்றுள்ளது. இதனைப் புதுச்சேரி முதலமைச்சர், சபாநாயகர் ஆகியோர் சட்டப்பேரவைச் சிறப்புக்கூட்டம் எனக்கூறி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளனர். இதனைக் கண்டித்து பாஜக உறுப்பினர்கள் மூன்று பேரும் வெளிநடப்பு செய்தோம்” என்றார்.
இதையும் படிங்க:ராஜிவ் காந்தி கொலை வழக்கு: '7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் அரசுக்கு இல்லை'