இந்தியாவுக்கு 1947ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்றாலும் 284 ஆண்டுகாலம் பிரெஞ்சு கட்டுப்பாட்டிலிருந்த புதுச்சேரிக்கு ஏழாண்டு கழித்து 1954ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதியே சுதந்திரம் கிடைத்தது.
முன்னதாக ஃபிரான்ஸ் நாட்டு ஆட்சியின் கீழ் இருந்து வந்த புதுச்சேரி மாநிலம், இந்தியாவுடன் இணைவது தொடர்பாகப் புதுவை மாநில மக்கள் பிரதிநிதிகளிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவாக 170 பேரும் எதிராக எட்டு பேரும் வாக்களித்தனர்.
1962ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி புதுவை மாநிலம் இந்தியாவுடன் இணைவது தொடர்பாக ஃபிரான்ஸ் நாடாளுமன்றம் சட்ட அங்கீகாரம் அளித்தது. அதன்பிறகு புதுவை மாநிலம் இந்தியாவுடன் இணைந்து இந்திய அரசியலமைப்பு முறையை ஏற்றுக்கொண்டது.
ஆகவே முழு அதிகார மாற்றம் நிகழ்ந்த ஆகஸ்ட் 16ஆம் தேதியை தங்களது சுதந்திர தினமாகப் புதுச்சேரி கொண்டாடிவந்தது. ஆனால், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த புதுச்சேரி மக்கள், நவம்பர் ஒன்றாம் தேதியைப் புதுச்சேரி சுதந்திர தினமாகக் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தி அறுபது ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
போராட்டக்காரர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, 2014ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி புதுச்சேரி விடுதலை நாளாக அறிவித்தார் அப்போதைய முதலமைச்சர் ரங்கசாமி. இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் அம்மாநில சுதந்திர தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. அதன்படி இந்தாண்டு வரும் நவம்பர் ஒன்றாம் தேதி கடற்கரைச் சாலையில் தேசியக்கொடியை முதலமைச்சர் நாராயணசாமி ஏற்றவிருக்கிறார்.
கோலாகலத்துடன் சுதந்திர தின விழாவுக்குத் தயாராகும் புதுச்சேரி இது குறித்து பிரெஞ்சு இந்தியா புதுச்சேரி பிரதேச விடுதலைக்கான மக்கள் நல நற்பணி இயக்கம் தலைவர் சிவராஜ் கூறுகையில், "நவம்பர் 1 புதுச்சேரி சுதந்திர தினமாக அரசு கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் அரசு அவ்வாறு கொண்டாடவில்லை. அரசின் இந்தச் செயலால் புதுச்சேரி மக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தினர். அதன் விளைவாக நவம்பர் 1ஆம் தேதி புதுச்சேரி சுதந்திர தினமாக அரசால் கொண்டாடப்பட்டுவருகிறது" என்று தெரிவித்தார்.
இந்திய அரசும் பிரெஞ்சு அரசும் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஆதரவளிக்கும்பட்சத்தில் புதுச்சேரி மக்கள் மீண்டும் ஃபிரான்ஸ் உடன் இணையலாம் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களும் அதில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆளுநர் கிரண் பேடிக்கு எதிர்ப்பு: கறுப்பு பலூன் பறக்கவிட்ட மக்கள்!