புதுச்சேரி சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், அதிமுக , திமுக உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். என்ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மட்டும் காரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டப்பேரவை கூட்டத்தில், ஏற்கனவே அறிவித்திருந்தபடி பங்கேற்கவில்லை.
சட்டப்பேரவையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதால் இருக்கைகள் மாற்றியமைக்கப்பட்டன. சட்டப்பேரவை தொடங்கியவுடன் திமுகவின் பொதுச்செயலாளராக இருந்து மறைந்த பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு அனைத்து சட்டபேரவை உறுப்பினர்களும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் முதலமைச்சர் நாராயணசாமி பேரவையில் பேசத்தொடங்கினார். அப்போது, கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக பேசுவதற்கு அதிமுக எம்எல்ஏ அன்பழகன் அனுமதி கோரினார். அதற்கு சபாநாயகர் சிவக்கொழுந்து இறுதியாக வாய்ப்பு வழங்கப்படும் என கூறியதை ஏற்காமல், அதிமுக எம்எல்ஏ-க்கள் திடீரென சபாநாயகர் சிவக்கொழுந்து இருக்கையை முற்றுகையிட்டனர்.