கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் வரும் மே மாதம் மூன்றாம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், பல்வேறு பகுதிகளில் வழக்கம்போல் கடைகள் இயங்கத் தொடங்கின. மேலும், மாநிலத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் அமல்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து பேசிய புதுச்சேரி மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ், ”புதுச்சேரியில் கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளபோதிலும், அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் பல பகுதிகள் கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, ஊரடங்கு உத்தரவு தளர்வினை மறுபரிசீலனை செய்யுமாறு முதலமைச்சர் நாராயணசாமிக்கு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது” என்றார்.