புதுச்சேரி: நாசா வெளியிட்ட சூரியனின் ஒலி குறித்து சர்ச்சையைக் கிளப்பும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளார் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொலி ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் சூரியனில் இருந்து வெளிப்படும் ஒலி, ஓம் என்ற மந்திரத்தை ஒத்திருப்பதாக பதிவிடப்பட்டிருந்தது. உண்மையில், அது சித்தரிக்கப்பட்ட காணொலி ஆகும்.
இந்த போலி காணொலியால் கிரண் பேடி, சமூக வலைதளங்களில் கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார். சில ஆண்டுகளாகவே அந்த காணொலி சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், கிரண் பேடியும் தற்போது அதை நம்பி போலிச் செய்தியைப் பதிவிட்டுள்ளார்.
ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தவர், பல புத்தகங்களை எழுதியவர் என்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவரான கிரண் பேடி, குறைந்தபட்சம் ஒரு செய்தியை சரிபார்க்காமல் பகிர்வது சரியா? என்று பலரும் அந்த ட்வீட்டில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நாசா வெளியிட்ட சூரியனின் ஒலி
மேலும், ஒரு எந்த அரசியல் முகங்களையும் தக்க வைக்கமுடியாத துணை நிலை ஆளுநர் பதவியை வகிக்கும் கிரண் பேடி, இப்படியொரு போலிச் செய்தியை பரப்பியது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து பின்னூட்டம் இட்டுள்ள ஒரு ட்விட்டர் வாசி, “ஒரு காலத்தில் இவர் பல லட்சம் பேருக்கு ரோல் மாடலாக இருந்தார். ஆனால் இப்போது இவர் வீழ்ந்துவிட்டார். விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சொன்னது போல மனித முட்டாள்தனத்திற்கு முடிவே இல்லை என்பது உண்மைதான்” என்று கூறியுள்ளார்.