மருத்துவர்கள் - செவிலியரின் போராட்டம் வாபஸ்
புதுச்சேரி: முதலமைச்சர் நாராயணசாமியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து சுகாதாரத் துறை ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
புதுச்சேரி காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரத்தின் தந்தை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் (அக். 01) சிகிச்சையின்போது இறந்துள்ளார்.
இதையடுத்து அவருக்குச் சரியான சிகிச்சை அளிக்காததுதான் அவரின் இறப்புக்கு காரணம் என சண்முகசுந்தரம், அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்தவர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவந்தனர்.
இதற்கிடையே, முதலமைச்சர் நாராயணசாமியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து சுகாதாரத் துறை ஊழியர்களின் போராட்டம் திரும்பப் பெறப்பட்டு பணிக்குத் திரும்பினர்.
மருத்துவமனை பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல் ஆய்வாளர் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து மூன்று நாள்களாக மருத்துவர்கள், செவிலியர் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது.