இது தொடர்பாக முதலமைச்சர் நாராயணசாமி இன்று வெளியிட்டுள்ள காணொலி பதிவில், "உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஊரடங்கு தளர்வுக்கு பின் தொற்று வேகமாக பரவிவருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
யூனியன் பிரதேசம் முழுவதும் மத்திய அரசின் மிக கடுமையான கட்டுப்பாடு விதிமுறைகள் விதிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இதுவரை கோவிட்-19 பரவலால் 3,298 பேர் பாதிக்கப்பட்டும், 48 பேர் உயிரிழந்தும் உள்ளனர். தற்போது வரை ஆயிரத்து 958 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 121 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்பில் மத்திய அரசு நேற்று பல புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இரவு நேர ஊரடங்கு தொடரும். சினிமா தியேட்டர் இயங்கவும், கோவில் திருவிழாக்கள் திருமணம் போன்ற சமூக கூடல்கள் நடத்தவும் விதிக்கப்பட்ட தடை மேலும் தொடரும்.
அரசியல் கூட்டங்கள், அரசியல் கட்சி நிகழ்வுகள் மீதான தடையும் தொடரும் என புதிய உத்தரவு பிறப்பிகக்கப்பட்டுள்ளது.
நமது மாநிலத்தில் கரோனா தொற்று வேகமாக பரவினால் தடுப்பதற்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு வெண்டிலேட்டர், உடை கவசம் போன்ற உதவிகளை அனுப்பி உள்ளது.