புதுச்சேரி அரசு கரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் அறிவிப்புகளையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முனைப்பாகச் செயல்பட்டுவருகிறது. தற்போது திரைப்பிரபலங்களைக் கொண்டு விழிப்புணர்வு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த காணொலி, புதுச்சேரியின் அழகான கடற்கரை, ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை, தலைமைச்செயலகம் எனத் தொடங்குகிறது. இதமான பின்னணி இசையுடன் கரோனா விழிப்புணர்வு கருத்துக்களை தெளிவாக எடுத்துரைக்கிறது.
புதுச்சேரியில் ஒற்றை இலக்கத்தில் இருந்த கரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை மூன்று இலக்கத்தை அடைந்துள்ளது. இதையடுத்து அம்மாநில அரசு கரோனா விழிப்புணர்வு வீடியோக்களைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது. முன்னதாக, மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்களின் அறிவுரைகள் அடங்கிய வீடியோக்களும் வெளியிடப்பட்டன.
அதைத் தொடர்ந்து, வரும் முன் காப்போம் என்ற தலைப்பில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக சித்த ஆயுர்வேத மருத்துவரின் வழிகாட்டல்கள் அடங்கிய வீடியோக்கள் வெளியிடப்பட்டன.