தமிழ்நாட்டின் அருகில் உள்ள யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அடுத்தாண்டு (2021) சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் பதவியிலிருந்து நாராயணசாமி நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாகக் கட்சியின் மூத்தத் தலைவர் நமச்சிவாயம் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக இருந்த ஆ. நமச்சிவாயம் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்குப் பதில், காங்கிரஸ் தலைவராக ஏ.வி. சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக நமச்சிவாயத்தை டெல்லிக்கு நேரில் அழைத்த அகில இந்திய காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் ஏ.வி. சுப்ரமணியன் நியமிக்கப்பட்டார்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஒரு கோஷ்டியும், அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் மற்றொரு கோஷ்டியும் இயங்கிவருகின்றன.