புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் புதுச்சேரி உப்பளம் சாலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
முன்னதாக ஜான்குமார் புதுச்சேரி மாநில காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து வாகனத்தில் பேரணியாக உப்பளம் தேர்தல் அலுவலகம் வந்தடைந்தார். அவருடன் முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், திமுக மாநில அமைப்பாளர்கள் சிவா, சிவகுமார், திமுக சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேசன், இடதுசாரி தலைவர்கள், விசிக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நாராயணசாமி செய்தியாளர் சந்திப்பு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, ‘காமராஜ் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜான்குமார், கூட்டணிக் கட்சிகளான திமுக, விசிக, இடதுசாரிகள் ஆகியோர் ஆதரவுடன் இத்தேர்தலை சந்திக்கிறார். காமராஜ் நகர் தொகுதியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வைத்திலிங்கம் இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அவர் இத்தொகுதியில் செய்த நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துரைத்து வாக்கு சேகரிப்போம்’ என்றார். இத்தொகுதியில் நாளை மறுநாள் பரப்புரை தொடங்க உள்ளதாக அவர் தெரிவித்தார். காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் - காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு