தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’35 ஆண்டுகளாக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற பாடுபட்டுவரும் காங்கிரஸ்’ - சொல்கிறார் நாராயணசாமி - puducherry state news

சென்னை: கடந்த 35 ஆண்டு காலமாக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற காங்கிரஸ் கட்சி, கூட்டணிக் கட்சிகள் இணைந்து பாடுபட்டுவருவதாகச் சொன்ன புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தை மத்தியில் இருக்கும் அரசு கொஞ்சம் கொஞ்சமாகப் பிடுங்கிவருவதாக குற்றஞ்சாட்டினார்.

puducherry cm narayanasamy
முதலமைச்சர் நாராயணசாமி

By

Published : Feb 10, 2021, 7:17 AM IST

புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நேற்று (பிப். 9) செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "மத்திய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை வழங்கவில்லையெனில் சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிக்க காங்கிரஸ் தயாரா என எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி கேள்வி எழுப்பியிருந்தார்.

புதுச்சேரி மாநிலத்துக்கு மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றுக் கருத்து இல்லை. 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது வெளியிட்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தைப் பெற்றுத் தருவோம் எனக் கூறியிருந்தோம். அதேபோல 2016ஆம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் மாநில காங்கிரஸ் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தோம்.

கடந்த 35 ஆண்டு காலமாக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற காங்கிரஸ் கட்சி, கூட்டணிக் கட்சிகள் இணைந்து பாடுபட்டுவருகின்றோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தை மத்தியில் இருக்கும் அரசு கொஞ்சம் கொஞ்சமாகப் பிடுங்கிவருகிறது.

மக்களுக்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கிரண்பேடி தடையாக உள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அவர் மதிப்பதில்லை; அதற்கு உறுதுணையாக மத்திய பாஜக அரசும் உள்ளது.

அதனால்தான் மாநில அந்தஸ்து பெறுவதைத் தவிர வேறு வழியில்லை என நாங்கள் உறுதியாக உள்ளோம். முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி தேர்தல் வரும்போதுதான் மாநில அந்தஸ்து பிரச்னையைக் கையில் எடுப்பார். ரங்கசாமி புதுச்சேரியில் ஆட்சி செய்யும்போது மத்தியில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தார். அப்போது அவர் மாநில அந்தஸ்தைப் பெறவில்லை.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தராவிட்டால் தேர்தலைப் புறக்கணிப்போம் என்பது எங்களின் தனிப்பட்ட கருத்து. கட்சித் தலைமை என்ன முடிவு எடுக்கின்றதோ அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தரக்கூடாது என்பது பாஜகவின் கருத்து.

முதலமைச்சர் நாராயணசாமி

பிரதமர், உள் துறை அமைச்சர், குடியரசுத் தலைவர் அனைவரிடமும் மனு கொடுத்துள்ளோம், அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஆகவே பாஜகவின் எண்ணம் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்கக் கூடாது என்பதுதான். மத்திய அரசு மாநிலங்களில் அதிகாரிகளைப் பறிக்க வேண்டும் என்பதற்காகவே மாநில அந்தஸ்தை தர மறுக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:அமைச்சர் சிவி சண்முகம் பேசியதாக பொய் பரப்புரை: 2 பேரிடம் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details