புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, "புதுச்சேரியில் நேற்று 41 பேருக்கு உமிழ்நீர் சோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் குணமடைந்துள்ளார். இதனால், ஆரஞ்சு மண்டலமாக இருந்த காரைக்கால் தற்போது பச்சை மண்டலமாக மாற உள்ளது.
தற்போது புதுச்சேரியில் மூன்று பேர் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகள் தற்போது பச்சை மண்டலமாக உள்ளன. உமிழ்நீர் பரிசோதனையில் புதுச்சேரி இரண்டாவது இடத்தில் உள்ளது"எனத் தெரிவித்தார்.
சிறு, குறு நிறுவனங்கள் கடன் வழங்குவது குறித்தும், தொழிற்சாலைகளுக்கு கடன் வழங்குதல், கட்டுமானப் பணிகளுக்கு சில சலுகைகள் வழங்குதல் உள்ளிட்டவை அடங்கிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பில், ஏழை எளிய மக்களுக்கு நிதியை உருவாக்குகின்ற அம்சம் எதுவும் இல்லை என்று விமர்சித்துள்ளார், நாராயணசாமி.