நாடு முழுவதும் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்த வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. புதுச்சேரியில் கரோனாவின் தொற்று ஓரளவிற்கு கட்டுக்குள் இருக்கிறது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் உள்ள குறிப்பிட்ட தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கியுள்ளன. இதற்கு அரசின் சார்பில் வழிக்காட்டுதல் நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாகக் காணொலி வெளியிட்டுள்ள புதுச்சேரி முதலமைச்சர் நாராணயசாமி,
"புதுச்சேரியில் உள்ள தொழற்சாலைகள், தங்களது பணியாளர்களை நிறுவனங்களின் அருகிலே தங்கும் வசதிகளை செய்துதர வேண்டும், இல்லை எனில் வீடுகளிலிருந்து பணிசெய்யும் நிறுவனத்திற்கு வாகன வசதி ஏற்படுத்தித் தர வேண்டும், அந்த வாகனங்களில் தனிநபர் இடைவெளியை உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும் தொழிலாளர்களுக்குப் பரிசோதனை செய்வதோடு, அவர்களுக்கு காப்பீடும் சம்பந்தப்பட்ட தொழில்சாலைகள் செய்ய வேண்டும். 33 விழுக்காடு பணியாளர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மேலும், தமிழ்நாட்டில் மருத்துவர்கள் தாக்கப்பட்டது, அடக்கம் செய்யவிடாமல் தடுத்தது கண்டனத்துக்குரியதாகும் என்று கூறிய நாராயணசாமி, இப்பிரச்னைக்கு தீர்வு காணும்வகையில், மத்திய அரசு ஏழு ஆண்டு சிறை தண்டனை என அறிவித்துள்ளதைப் புதுச்சேரி அரசு வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.
இறுதியில், கரோனா நிவாரண நிதியாக புதுச்சேரி மாநிலத்திற்கு ஐந்து லட்ச ரூபாய் வழங்கியுள்ள நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்த நாராயணசாமி, இதுபோன்று மற்ற நடிகர், நடிகைகளும் புதுச்சேரி மாநில மக்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் பார்க்க:சர்வதேச புத்தக நாள்: வாசிப்பின் அவசியமும்... தேவையும்..!