மக்களவைத் தேர்தல் காரணமாக புதுச்சேரியில் கடந்த முறை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஜூன் மாதத்துடன் இடைக்கால பட்ஜெட் நிறைவுபெறுவதை முன்னிட்டு முழு பட்ஜெட் தாக்கல் செய்ய புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கான கோப்பினை துணைநிலை ஆளுநருக்கு அனுப்பியும் வைத்தது. ஆனால், ஆளுநர் 20 நாள்களுக்கு மேலாக காலதாமதபடுத்தியதாக ஆளுங்கட்சி தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்பாக மத்திய அரசு புதுச்சேரி அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய அனுமதியளித்தது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநரின் உரையும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆளுநர் உரை தயாரித்து நேற்று மாலை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது.
ஆனால், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, ”நான் உரையைப் படித்துப் பார்ப்பதற்கு கால அவகாசம் தேவை. ஆண்டு வரவுசெலவு அறிக்கையை எனக்கு தாக்கல் செய்ய வேண்டும். மேலும் துறை ரீதியாக செலவீன விவரங்களை அளிக்க வேண்டும். போதிய காலம் இல்லாததால் பட்ஜெட்டை வேறு ஒரு நாள் நடத்தலாம்” எனக் கூறி முதலமைச்சருக்கு கடிதம் அளித்தார். மேலும் இந்தக் கடிதத்தை யாரும் பெறவில்லை என்பதால், மத்திய அரசுக்கு அனுப்பிவைப்பதாக கிரண்பேடி அறிக்கையாக வெளியிட்டுக் கூறினார்.