தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 20, 2020, 7:05 PM IST

ETV Bharat / bharat

ஆளுநர் உரை இன்றி தாக்கல் செய்யப்பட்ட புதுச்சேரி பட்ஜெட்!

புதுச்சேரி: வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்குக் குடிநீர் வரியை ரத்து செய்யப்படும் எனக்கூறி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப் பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

முதலமைச்சர் நாராயணசாமி
முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி மாநிலத்தில், நடப்பு நிதியாண்டிற்கான முழுமையான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய ரூபாய் 9 ஆயிரம் கோடிக்கு நிதிநிலை அறிக்கை மதிப்பீடு செய்து, மத்திய உள்துறை மற்றும் நிதித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதையடுத்து, புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின்றி தொடங்கப்பட்ட கூட்டத்தொடரில், 2020-21 நடப்பு நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை இன்று (ஜூலை.20) தாக்கல் செய்யப்பட்டது.

நடப்பு நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார். அதில், "வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்குக் குடிநீர் வரியை ரத்து செய்தும், 100 யூனிட்டிற்கு கீழ் பயன்படுத்தும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு மின்சார இலவசமாக வழங்கப்படும்.

நம்மாழ்வார் வேளாண் புத்தாக்கத் திட்டத்தினை அறிமுகப்படுத்தி, நெல் உள்ளிட்ட சிறுதானியம் மற்றும் இதர பயிர் வகைகளுக்கு அரசு மானியம் வழங்க முடிவு செய்துள்ளனர். புதுச்சேரியில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டையில் வழங்கும் திட்டத்திற்காக ரேஷன் கடைகள் புதுப்பிக்கப்படும். புதுச்சேரியில் பால் உற்பத்தியைப் பெருக்கி, மகாத்மா காந்தி பெயரில் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு 2 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு தற்போது காலையில் பால் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, கலைஞர் கருணாநிதி சிற்றுண்டி திட்டம் என்ற பெயரில் காலையில் இட்லி, பொங்கல், கிச்சடி எனச் சிற்றுண்டி வழங்கப்படும்.

அப்துல்கலாம் பெயரில், 10, 12ஆம் வகுப்பு பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா கைக்கணினி வழங்கப்படும். ஏனாம் பிராந்தியத்தில் அப்துல்கலாம் பெயரில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரி இந்த கல்வி ஆண்டில் தொடங்கப்படும்.

வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் கல்லூரிகளில் அனைத்து கல்விக் கட்டணத்தை ரத்து செய்து இலவசக் கல்வி வழங்கப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு, இந்திராகாந்தி மருத்துவக் காப்பிட்டுத் திட்டம் தொடங்கப்பட்டு, முழு மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்.

ஆதி திராவிடர்களுக்குத் திருமண நிதி உதவியாக, ரூபாய் 75 ஆயிரம் வழங்கப்பட்டு வந்த நிலையில், அதனை உயர்த்தி ரூபாய் 1 லட்சம் வழங்கப்படும் என பல்வேறு திட்டங்களை நாராயணசாமி அறிவித்தார்.

முதலமைச்சரின் இந்த நிதிநிலை அறிக்கைக்குப் பிறகு சபாநாயகர் சிவக்கொழுந்து சட்டப்பேரவை நிகழ்வை நாளை ( ஜூலை 21) காலை வரை ஒத்திவைத்தார். முன்னதாக மானிய கோரிக்கைகள் விவரங்கள் துறை ரீதியாக முழுமையாகச் சமர்ப்பிக்கவில்லை.

பேரைவைக்கான ஆளுநர் உரையைக் கால தாமதமாக அனுப்பியதாகக் கூறி, கிரண்பேடி பட்ஜெட் உரைக்கு வர மறுப்பு தெரிவித்தார். ஆனால், மத்திய அரசின் அனுமதி பெற்ற பின்னரே கூட்டத்தொடர் தொடங்குவதால், ஜனநாயக முறைப்படி ஆளுநர் இதில் பங்கேற்கலாம் என்று, துணை நிலை ஆளுநருக்கு முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து கொண்டிருந்தபோது, ஆளுநர் அனுமதியின்றி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details