புதுச்சேரி அரசு ஆண்டுதோறும் மார்ச் மாதம் முழுமையான நிதிநிலை அறிக்கையை தாக்கல்செய்யும். ஆனால் 2011ஆம் ஆண்டு முதல் மார்ச் மாதம் தாக்கல்செய்யப்படவில்லை. இதற்குப் பதிலாக மூன்று அல்லது ஆறு மாத செலவினங்களுக்கு சட்டப்பேரவையில் ஒப்புதல் பெறப்படுகிறது. அதனால் ஜூன் அல்லது ஜூலை மாதம் சட்டப்பேரவை கூடி முழுமையான நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யப்படுகிறது.
அதேபோல் இந்தாண்டும் மார்ச் 30ஆம் தேதி மூன்று மாத அரசு செலவுகளுக்கு இடைக்கால நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் ஒப்புதல் பெறப்பட்டது. இதனால் இம்மாதம் இறுதிக்குள் 2020-21ஆம் ஆண்டுக்கான முழுமையான நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும்.
இதன்படி மாநில வருவாய்த் துறை, மானியம் குறைப்பு ஆகியவற்றைக் கணக்கிட்டு பட்ஜெட் தொகையை மதிப்பீடு செய்து ஒப்புதல் கோரி மத்திய அரசுக்கு புதுச்சேரி அரசு கோப்பு அனுப்பியுள்ளது. இதற்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்து உள் துறை அமைச்சகத்திற்கு அனுப்பி உள்ளது.
இதனையடுத்து மத்திய உள் துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெற முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து முயற்சித்துவருகிறார். ஆனால் ஒப்புதல் பெற கால தாமதமாகிவருகிறது. இதனால் இம்மாதம் 30ஆம் தேதிக்குள் நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க...கல்வான் தாக்குதலில் வீரமரணம்: ஒரே வாரத்தில் காப்பீட்டு தொகை வழங்கிய எஸ்.பி.ஐ!