புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில், நாடு முழுவதிலும் இருந்து 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு, மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தைப் பல்கலைக்கழக நிர்வாகம், பல மடங்காக உயர்த்தி அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
கல்விக் கட்டண உயர்வுக்கு எதிராகவும், புதுச்சேரி மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்கக் கோரியும், இலவச பேருந்து சேவையைத் தொடர்ந்து இயக்கக் கோரியும் 24ஆவது நாளாகப் போராடி வரும் பல்கலைக்கழக மாணவர்கள், நேற்று நள்ளிரவு 12 மணி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.