'கத்துவது நானில்லை உள்ளே துடிக்கும் உயிர்' என்ற வாசங்கள் எழுதப்பட்ட ஆம்புலன்சை புதுச்சேரியில் பல இடங்களில் பார்க்க முடியும். விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பல உயிர்களை காப்பாற்றி வருகிறார், ஆம்புலன்ஸ் மணி.
புதுச்சேரி தமிழக எல்லைப்பகுதியில் உள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் "ஆம்புலன்ஸ் மணி" என்று அழைக்கப்படும் மணிகண்டன். ஏழ்மையான குடும்ப பின்னணி கொண்ட இவர், பழைய இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்துவருகிறார். தனது சொற்ப வருமானத்தில் குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, அப்துல் கலாம் பெயரில் இலவச ஆம்புலன்ஸ் சேவையையும் நடத்திவருகிறார்.
இதுகுறித்து மணிகண்டனை சந்தித்தபோது, இலவச ஆம்புலன்ஸ் சேவை செய்வதற்கு தனக்கு உந்துசக்தியாக இருந்த சம்பவம் குறித்து பேசத் தொடங்கினார். "2006ஆம் ஆண்டு சாலையில் செல்லும்போது ஒரு விபத்த பாத்தேன். அருகில் சென்று பார்த்தபோது தான் அது என்னுடைய தம்பினு தெரிஞ்சது. மனசு படபடத்தது. அவனை தூக்கிகிட்டு "ஆம்புலன்சை கூப்பிடுங்க" என்று கத்தினேன். ஆம்புலன்ஸுக்கு போன் செய்தும் உடனடியா ஆம்புலன்ஸ் வரல... அப்புறம் வேற ஒரு வண்டியில் தம்பியைக் கூட்டிக்கிட்டுப் போய் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். கொஞ்சம் நேரம் முன்பே வந்திருந்தால் உயிரை காப்பாற்றியிருக்கலாம் அப்படினு டாக்டர் சொன்னாங்க, இழப்பின் வலியை உணர்ந்தால் தான் உயிரோடு முக்கியத்துவம் தெரியும். என் தம்பி மாதிரி வேற யாரும் விபத்தில் உயிர் போகும் நிலைக்கு வந்துவிட கூடாது என்று தீர்மானித்தேன், ஏதாவது செய்யணும்னு முடிவு செய்தேன்.
அதனுடைய தாக்கம் தான் சிறுக சிறுக சேர்த்து வைத்த பணம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, தவணை முறையில் ஒரு ஆம்புலன்ஸ் வாங்கினேன். அப்துல் கலாம் பெயரில் இந்த ஆம்புலன்ஸ் நடத்துகிறேன். இந்த சேவை செய்வதினால என் தம்பியை காண்கிறேன்.
கரோனா நேரத்தில வீட்டுக்குகூட போகாமல் ஆம்புலன்ஸ்சில் தூங்கிக் கொண்டிருக்கிறேன். இங்க இருக்கிற காவல் துறையினர் தான் எனக்கு உணவு வாங்கிக் கொடுத்தாங்க. கடந்த 55 மாதங்களாக இதை ஒரு தொழிலாக செய்யாம சேவையாக இலவசமாக பண்ணிட்டு இருக்கேன். இதுவரை கிட்டத்தட்ட 850க்கும் அதிகமாக உயிர்களை காப்பாற்றி இருக்கிறேன். அவசர உதவிக்கு காவல் துறைக்கு போன் பண்ணினா என் நம்பர் தான் கொடுப்பாங்க. இரவு, பகல் பாராமல் இலவச சேவை செய்து வருகிறேன். எனக்கு அதில ஒரு ஆத்ம திருப்தி கிடைக்குது " என்றார்.