புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'இரு தினங்களுக்கு முன் அலுவலர்களை ஆட்சியாளர்கள் மிரட்டி வருவதாக கிரண்பேடி சமூக வலைதளத்தில் கூறியிருந்தது எனக்கு சிரிப்பை ஏற்படுத்தியது. அவர் கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானது.
ஆளுநர் தான் கடந்த மூன்று ஆண்டுகளாக சிபிஐ-யிடம் பிடித்துக் கொடுப்பேன் என அலுவலர்களை மிரட்டி வருகிறார். குடியரசு தின விழா விதிமுறைகளை ஆளுநர் கிரண்பேடி கடைபிடிக்கவிலல்லை. குடியரசு தின விழாவிற்கு வந்த காவல்துறையினர் வணக்கம் செலுத்தியபோது கையை உயர்த்தி மரியாதை செலுத்தவில்லை.
குடியரசு தின விழா விதிமுறைகளையும் அவர் கடைபிடிக்கவில்லை. இது புதுச்சேரி மக்களை அவமதிக்கும் செயல். குடியரசு தின தேநீர் விருந்தில் திடீரென பாராட்டு விழாக்களை நடத்துவது விதிமீறிய செயல். சட்டத்தைப் புறக்கணித்து சில அலுவலர்களுக்கு சான்றிதழ்கள் கொடுப்பதாக அவர் அறிவித்தார்.