புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 9:30 மணி சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் தொடங்கியது. சட்டப்பேரவைக்கு ஆளுநர் கிரண்பேடி வருகை தந்தபோது காவல் துறை மரியாதை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சபாநாயகர் சிவக்கொழுந்து ஆளுநருக்குப் பூங்கொத்து கொடுத்து அவரை சபைக்கு அழைத்துச் சென்றார்.
சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள், எதிர்க்கட்சி என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, அக்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்தியபோது, அதிமுக உறுப்பினர்கள் மூன்று பேரும் அன்பழகன் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
இந்த ஆட்சியின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை..! அதிமுக வெளிநடப்பு! அப்போது பேசிய அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன், “காங்கிரஸ் அரசு, மத்திய அரசின் திட்டங்களைக் கண்மூடித்தனமாக எதிர்த்து வருவதால், மாநில மக்களுக்கு, மத்திய அரசின் திட்டப் பயன்கள் சென்றடையவில்லை. வறுமையுஐ ஒழிப்போம், வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்ற வாக்குறுதி அளித்து, அவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு 30 மாதமாகச் சம்பளம் வழங்கப்படவில்லை. பஞ்சாலை ஊழியர்களுக்கு, 15 மாதமாக உதவித்தொகை இல்லை. நியாய விலை கடை ஊழியர்களுக்கு ஒன்றரை வருடங்களாகச் சம்பளம் இல்லை. இலவச அரிசி, இலவச வேட்டி, சேலைகூட இந்த அரசு வழங்கவில்லை.
உயர்த்தப்பட்ட மின் கட்டண வரி, குப்பை வரி, வீட்டு வரி, சொத்து வரி எந்தவகையிலும் குறைக்கப்படவில்லை. இந்த ஆட்சியின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. துணைநிலை ஆளுநரைக் குறை கூறி, மக்கள் விரோத ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசைக் கண்டித்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.