கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ஆம் தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, நான்காம் முறையாக சில தளர்வுகளுடன் மே31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளின் அடிப்படையில், கடந்த பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
அதன்படி, காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு, புதுச்சேரி போக்குவரத்து கழகத்தின் இரண்டு பிஆர்டிசி பேருந்துகளை, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்.
காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு, காலையில் 7 மணிக்கு ஒரு பேருந்தும், மதியம் 12.30 மணிக்கு ஒரு பேருந்தும் இயக்கப்படுகிறது. பேருந்தில் 35 நபர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், இந்தப் பேருந்து இடையில் எங்கும் நிற்காமல் காரைக்கால் பேருந்து நிலையத்தில் தொடங்கி, புதுச்சேரி பேருந்து நிலையத்தில் நிற்கும். இதற்கான முன்பதிவு காரைக்கால் பேருந்து நிலையத்தில் செய்யப்படுகிறது.