1 முதல் 8-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் கட்டாயத் தேர்ச்சி செய்யும் முறை தற்போது அமலில் உள்ளது. இதனால் கல்வியின் தரம் பாதிக்கப்பட்டுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்துவருகின்றன.
இதனையடுத்து ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக கூறிவந்தது. இதனால், கிராமப் புறங்களில் வாழும் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படலாம் என சில மாநிலங்கள் கருத்து தெரிவித்தன.
இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கட்டாய தேர்ச்சியால் கல்வியின் தரம் பாதிக்கப்படுவதாகவும், இதனால் 8-ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு வைக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
இந்நிலையில் கட்டாயத் தேர்ச்சி முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டு, அந்த சட்டத்திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு ஆண்டின் இறுதியில் பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டும். இதில் தோல்வியடையும் மாணவர்களுக்கு தேர்வு முடிவு வெளியான இரண்டு மாதங்களில் உடனடித் தேர்வு நடத்த வேண்டும். அதிலும் மாணவர்கள் வெற்றி அடையாவிட்டால், அடுத்த வகுப்பிற்கு அனுமதிக்காமல் அதே வகுப்பிலேயே மீண்டும் தொடர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.