ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.ஆர். வெங்கடேஷ் பட்டினம் என்ற கிராமத்தில் இயங்கி வந்த எல்.ஜி பாலிமர்ஸ் தனியார் ரசாயனத் தொழிற்சாலையில் நேற்று(மே.7) அதிகாலை 2 மணியளவில் திடீரென கசிவு ஏற்பட்டது. எதிர்பாராத விதமாக ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்த கோர ஸ்டைரீன் விஷ வாயு கசிவின் காரணமாக, சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் 2000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக பெரியவர்கள், குழந்தைகள் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலையில் நடந்து சென்றவர்கள், திடீரென மயக்கம் போட்டு விழுந்தனர். வாயுக் கசிவினால் ஆடு மாடுகள் உள்ளிட்ட செல்லப்பிராணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. இந்த ஸ்டைரீன் விஷ வாயுக் கசிவினால் இதுவரை ஒரு சிறுமி உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
காற்றில் கலந்திருக்கும் ஸ்டைரீன் விஷ வாயுவின் நச்சுத் தன்மையை குறைப்பதற்கு பயன்படுத்தப்படும் பி.டி.பி.சி (பாரா-மூன்றாம் நிலை பியூட்டில் கேடகோல்) என்னும் ரசாயனத்தை அளிக்க வேண்டும் என்ற ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கோரிக்கை விடுத்ததையடுத்து, குஜராத் மாநில அரசு வழங்கியது.