டெல்லி: பொதுத்துறை வங்கிகள் மூலம் இதுவரை ரூ. 8 ஆயிரத்து 320 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கோவிட் - 19 முடக்கத்தால் நாட்டின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் தற்சார்பு பொருளாதாரத் திட்டத்தை அறிவித்தார். அந்த திட்டங்கள் குறித்து மே மாதம் மத்திய நிதிமையச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
அதில் முக்கியமாக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக பிணையில்லாத ரூ.3 லட்சம் கோடி கடன் திட்டத்தை அவர் அறிவித்தார்.
இந்த அறிவிப்பின்படி, ஜூன் ஒன்றாம் தேதி முதல் பொதுத்துறை வங்கிகள் அவசர கடன் உறுதித் தி்ட்டத்தின் கீழ் ரூ17ஆயிரத்து 705.64 கோடி கடன் வழங்க அனுமதித்துள்ளன.
இதுகுறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் “ ஜூன் 2 ஆம் தேதிவரை பொதுத்துறை வங்கிகள் மூலம் ரூ17ஆயிரத்து705.64 கோடி கடன் அவசர கடன் உறுதித்திட்டத்தின் கீழ் வழங்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இதில் ரூ.8,320.24 கோடி கடன் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் வங்கி ரூ. 11,701 கோடி கடன் வழங்க ஒப்புதல் வழங்கி, அதில் ரூ. 6,084 கோடி கடன் ஜூன் 5ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ.1,295.59 கோடி கடன் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டு அதில் ரூ. 242 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது” என பதிவிட்டுள்ளார்.