கரோனா வைரசால் (தீநுண்மி) பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை (MSME) ஊக்குவிக்கவும், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் மத்திய அரசு சமீபத்தில் மூன்று லட்சம் கோடி ரூபாய்க்கு அவசரக் கடன் வரி உத்தரவாதத் திட்டத்தை (Emergency Credit Line Guarantee Scheme - ECLGS) அறிவித்தது.
சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்படும் இந்த மூன்று லட்சம் கோடி ரூபாய் கடன் திட்டம்தான் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பிணையில்லா கடன் திட்டம் ஆகும்.
இத்திட்டத்தின்படி, முதல் 12 மாதங்களுக்கு கடன் தவணை செலுத்த வேண்டாம். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. அப்படிப் பார்க்கையில் கடனைத் திரும்பச் செலுத்தும் காலம் மொத்தம் நான்கு ஆண்டுகள்.
இந்தத் திட்டத்தின்கீழ் அனைத்து வங்கிகளும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.