புதுச்சேரி மாநிலத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு சிவப்பு நிற குடும்ப அட்டையும், வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு மஞ்சள் நிற குடும்ப அட்டையும் என இரண்டு விதமான குடும்ப அட்டைகள் நடைமுறையில் உள்ளது. தற்போது ஊரடங்கு காரணமாக வறுமைக்கோட்டிற்குக் கீழ், உள்ள சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு மத்திய அரசின் உத்தரவின்படி, தலா 5 கிலோ இலவச அரிசி புதுச்சேரி மாநிலத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே ஊரடங்கு காரணமாக வறுமைக்கோட்டிற்கு மேல் வாழும் மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களும் வேலை இல்லாத காரணத்தால், மாநில அரசு இலவச அரிசியை வழங்க வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு, 3 மாதத்திற்கு 30 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்து இருந்தது.