உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் நிலங்களை தங்களுக்கு கொடுக்குமாறு மாற்று சமூகத்தினர் கட்டாயப்படுத்தினர். ஆனால் அதற்கு பழங்குடியின மக்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், அங்கு கலவரம் நடந்து 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 28பேர் காயமடைந்தனர்.
சோன்பத்ராவில் தொடர்ந்து பதற்றம்; பிரியங்கா தர்ணா!
லக்னோ: சோன்பத்ரா துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை பார்க்க சென்ற பிரியங்கா தடுத்து நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்திக்க உத்தரபிரதேச கிழக்குப்பகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி நேற்று சென்றார். ஆனால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவிடாமல் பிரியங்கா காந்தியை, காவல்துறையினர் தடுத்தனர். இதனால், அப்பகுதியில் அமர்ந்து பிரியங்கா காந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், "பாதிக்கப்பட்டவர்களில் இருவர் மட்டுமே என்னை சந்திக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். 15 பேருக்கு அனுமதி வழங்கப்படவில்லை" என்று குற்றம் சாட்டினார்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் சென்றுள்ளார். அவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.