இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகம் பேர், மற்ற மாநிலங்களில் சிக்கியுள்ளனர். இவர்களுக்கு உத்தரப் பிரதேச அரசு உதவ வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், "ராஜஸ்தான், டெல்லி, சூரத், இந்தூர், போபால், மும்பை உள்ளிட்டப் பகுதிகளில் சிக்கித்தவிக்கும் தொழிலாளர்களிடம் தொடர்ந்து நான் பேசிவருகிறேன். பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் இங்கிருந்து வெளி நகரங்களுக்குச் சென்றனர். ஆனால், ஊரடங்கு காரணமாக தற்போது வேலையிழந்து வெளி மாநிலங்களில் சிக்கியுள்ளனர்.
வெளிமாநிலங்களில் ஆறு முதல் எட்டு பேர் வரை, ஒரே அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெளியே செல்லவும் அவர்களுக்கு அனுமதியளிப்பதில்லை. அத்தியாவசியப் பொருள்களும் அவர்களிடம் போதியளவு கையிருப்பு இல்லை.
அவர்கள் தற்போது பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். அனைவருமே தங்கள் சொந்த ஊருக்கே திரும்ப விரும்புகின்றனர். இதற்காக அவர்களை நாம் குற்றம் சொல்ல முடியாது. அவர்களின் பிரச்சனைகளுக்கு நாம் தான் தீர்வுகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.