நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்துவரும் மக்களவைத் தேர்தலையொட்டி கட்சித் தலைவர்களின் பரப்புரைகள் களைகட்டியுள்ளது. பாஜகவை எப்படியாவது வீட்டுக்கு அனுப்பி ஆட்சி அரியணையில் மீண்டும் அமர காங்கிரஸ் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
வாரணாசிக்கு செல்ல மோடிக்கு நேரமில்லையா? பிரியங்கா காந்தி கேள்வி - மோடி
திஸ்பூர்: அமெரிக்கா, ரஷ்யா செல்லும் மோடிக்கு அவரது சொந்த தொகுதியான வாரணாசியில் செலவழிக்க நேரமில்லையா? என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேச கிழக்கு பகுதி தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் பிரியங்கா காந்தி அசாம் மாநிலம் சில்சாரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், அமெரிக்கா, ரஷ்யா, சீனா என உலகின் பல நாடுகளுக்கு சென்றுவரும் மோடிக்கு அவரது சொந்த தொகுதியான வாரணாசியில் செலவழிக்க நேரமில்லையா? என கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் பேசுகையில், அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அழிக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுவருகிறது என்றார். முன்னதாக இம்மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் பிரியங்கா காந்தி களமிறங்குவார் என தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.