உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. இந்திய அளவில் கரோனா வைரஸ் பரவல் மூன்றாம் கட்ட சமூக பரவல் நிலையை ஏட்டியுள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. நாளுக்கு நாள் மிகத் தீவிரமடைந்து வருகின்ற கரோனா தொற்றின் காரணமாக நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர்.
கரோனாவால் இதுவரை இந்தியாவில் 6 லட்சத்து 51 ஆயிரத்து 46 பேர் பாதிக்கப்படும், 3 லட்சத்து 94 ஆயிரத்து 849 பேர் குணமடைந்து வீடு திரும்பியும் உள்ளனர். 18 ஆயிரத்து 691 பேர் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் 3000க்கும் மேற்பட்ட இடங்கள் அதிக பாதிப்பைக் கொண்டிருக்கும் சிவப்பு குறியீட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் இதுவரை 95 லட்சத்து 40 ஆயிரத்து 132 பேரிடம் கோவிட்-19 கண்டறிதல் சோதனை நடத்தப்பட்ட நிலையில், மக்கள் அனைவரிடமும் கோவிட்-19 கண்டறிதல் சோதனையை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதனையடுத்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் ஐ.சி.எம்.ஆர் நிறுவனம் இந்தியா முழுவதும் பரிசோதனைகளை வேகப்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக ஐ.சி.எம்.ஆர் கூடுதல் இயக்குநர் மருத்துவர் ஜி.எஸ். டோட்டேஜா மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "தற்போதைய சூழ்நிலையில் கோவிட்-19க்கான சோதனையை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் நன்கு புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நெருக்கடியின் பின்னணியில், கரோனாவை எதிர்கொள்ள முதல்கட்டமாக நாடு முழுவதும் விரிவான விரைந்த உயர்தர கண்டறிதல் சோதனையை வேகப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
7 நாள்களுக்குள் விரைவான ஒப்புதல்கள் வழங்கப்படுவதற்கான வழிமுறைகளை என்.ஏ.பி.எல் நிறுவியுள்ளது. என்.ஏ.பி.எல் விதிமுறைகளுக்கு இணங்கும் தனியார் ஆய்வகங்கள் அதற்கான அங்கீகாரத்தைப் பெற வேண்டும். இன்னொன்று பல ஆய்வகங்கள் முதல் முறையாக இந்த சோதனையை மேற்கொள்ள இருப்பதால் பரிசோதனைகளின் தரத்தையும், சோதனை முடிவுகளின் சரியான விளக்கத்தையும் உறுதி செய்வதில் ஐ.சி.எம்.ஆர் மிகுந்த கவனமாக உள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து கண்டறியும் ட்ரூநெட் பீட்டா/ சிபிஎன்ஏஏடி நியூக்ளிக் அமில அடிப்படையிலான பரிசோதனையை மேற்கொள்ள விரும்பும் தனியார் ஆய்வகங்கள் உடனடியாக என்.ஏ.பி.எல் அங்கீகாரத்தைப் பெற வேண்டும். அதன் பின்னர் அங்கீகாரத்தை பெற்ற ஆய்வகங்கள் அனைத்து ஆவணங்களையும் நகலுடன் ஐ.சி.எம்.ஆரை அணுகலாம்.
இதை ஆராய்ந்த பின், ஐ.சி.எம்.ஆர் விரைவான ஒப்புதலை வழங்கும். என்.ஏ.பி.எல்லின் கடித ஒப்புதல் தேதியிலிருந்து நான்கு வார காலத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்" என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.