உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் நிலவிவந்த 70 ஆண்டுகால சச்சரவு கடந்தாண்டு (2019) நவம்பர் 9ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்டது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து, அயோத்தியில் ராமர் கோயில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், கரோனா பரவல் காரணமாக கட்டுமானப் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது கரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், நாளை பூமி பூஜையுடன் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கவுள்ளன. நாளை காலை சுமார் 11.30 மணிக்கு நடைபெறவுள்ள அடிக்கல் நாட்டும் விழாவில் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.
இந்நிலையில் நாளை தினத்திற்கான பிரதமர் மோடியின் பயண விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
- காலை 9:35 மணிக்கு பிரதமர் மோடி டெல்லியில் இருந்து புறப்படுகிறார்.
- காலை 10:35 மணிக்கு மோடியின் விமானம் லக்னோ விமான நிலையத்தில் தரையிறங்குகிறது.
- காலை 10:40 மணிக்கு அயோத்திக்கு விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் புறப்படுகிறார்.
- காலை 11:30 மணிக்கு அயோத்தியில் உள்ள சாகேத் காலனியில் ஹெலிகாப்டர் தரையிறங்குகிறது.
- காலை 11:40 மணிக்கு அனுமன் கர்ஹியில் தரிசனம் செய்கிறார்.
- மதியம் 12 மணிக்கு ராமர் கோயில் கட்டப்படவுள்ள இடத்தை அடைகிறார்.
- அங்கு 10 நிமிடங்கள் ராமரை (குழந்தை ரூபத்தில் இருக்கும் ராமர்) தரிசிக்கிறார்.
- மதியம் 12.15 மணிக்கு கோயிலின் வளாகத்தில் மரம் நடும் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.
- மதியம் 12.30 மணிக்கு பூமி பூஜை தொடங்குகிறது.
- மதியம் 12:40 மணிக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெறுகிறது.
- மதியம் 1:10 மணிக்கு சுவாமி நிருத்யகோபால் தாஸ் உட்பட மற்ற ராம் ஜன்மபூமி அறக்கட்டளை உறுப்பினர்களை சந்திக்கிறார்.
- மதியம் 2.05 மணிக்கு பிரதமர் மோடி சாகேத் காலனியிலுள்ள ஹெலிபேடிற்குச் செல்கிறார்.
- மதியம் 2:20 மணிக்கு லக்னோ புறப்படுகிறார்.
இதையும் படிங்க:ஸ்ரீ ராம ஜென்ம பூமி இயக்கம் ஒரு பார்வை!