மகாத்மா காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் உற்சாகமாக இன்று கொண்டாடப்பட்டுவருகிறது. மத்திய அரசு சார்பில் நாடு தழுவிய கொண்டாட்டத்துக்கு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
காந்தியடிகளுக்கு மலரஞ்சலி செலுத்தும் பிரதமா் நரேந்திர மோடி இந்நிலையில், மகாத்மா காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து அவர் ட்விட்டரில் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "அன்பான பாபுவுக்கு (மகாத்மா காந்தி) 150ஆவது அஞ்சலி. மனித குலத்துக்கு அவர் அளித்த பங்களிப்பை நன்றியுடன் நினைவுகூருவோம். அவரின் கனவை நனவாக்க தொடர்ச்சியாக உழைப்போம்; சிறந்த உலகை உருவாக்குவோம்" எனக் கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி செயல் தலைவர் ஜே.பி. நட்டா, அக்கட்சியின் முதுபெரும் தலைவர் எல்.கே. அத்வானி ஆகியோரும் காந்தியடிகளுக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.