உலக சுகாதார நிறுவனம், அக்டோபர் 10ம் தேதியை, உலக மனநல தினம் என அறிவித்துள்ளது. ஒரு மனிதனுக்கு உடல் நலம் எவ்வளவு முக்கியமோ மன நலனும் முக்கியம். மனமும் உடலும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. மனிதனுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்பட்டால் அது உடலையும் பாதிக்கும், அதே போல் உடலுக்கு ஏதாவது பாதிப்பு என்றால் அது மனதை பாதிக்கும் எனவே மன நலத்தின் முக்கியத்துவம் பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்துவதே, உலக மனநல நாளின் முக்கிய நோக்கமாகும்.
மாறி வரும் சமூக, பொருளாதார சூழல்களால் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. உலக சுகாதார நிறுவன அறிக்கையின்படி ஒவ்வொரு, 40 வினாடிகளுக்கும் உலகின் எங்கோ ஒருமூலையில் யாரோ ஒருவர் தற்கொலை செய்து கொள்கின்றார். குறிப்பாக, தென் கிழக்கு ஆசிய நாடுகளில், இந்தியாவிலேயே அதிக தற்கொலைகள் நிகழ்கின்றன.
நாமும் தற்கொலையைத் தடுக்கலாம்: மன பலவீனம் உடையவர்களே தற்கொலை எண்ணத்தால் தூண்டப்படுகிறார்கள் என்று எண்ணாதீர்கள். பொதுவாக ஒருவருக்கு தற்கொலை எண்ணம் மேலோங்கும்போது அவரின் உணர்வுகளை நிச்சயம் யாரேனும் ஒருவரிடமாவது பகிர்ந்து கொள்வர். அது நிராகரிக்கப்படும்போதே நம்பிக்கை இழந்து தற்கொலை முயற்சியில் ஈடுபடுவர். உங்களிடம் யாரேனும் ஒருவர் எனக்கு வாழப் பிடிக்கவில்லை, நான் இறப்பதே மேல் என்று சொன்னால் அதை அலட்சியப்படுத்தி, தானே சரியாகிவிடும் என எண்ணிவிடாதீர்கள். அவர்களுடைய மனச்சோர்வின் வெளிப்பாடாக அந்த வார்த்தைகள் இருக்கலாம். நாம் அவர்களின் உணர்வுகளைப் பகிர்ந்து தற்கொலை எண்ணம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் போது, அவர்களுக்கு நம்பிக்கை பிறக்கும். சரியான முறையில் அவர்களை கையாண்டால் தற்கொலை எண்ணத்தையும் மாற்ற முடியும். உங்களுடைய ஆறுதலான வார்த்தையும் மிக முக்கியம். தற்கொலையைத் தடுப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.
நீங்களும் தற்கொலை தடுக்கலாம்
ஒருவருக்குத் தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் முதலில் அது குறித்து யாரிடமாவது பேச வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. மேலும் மருத்துவ சிகிச்சை மற்றும் உளவியல் சிகிச்சை மூலம், தற்கொலை எண்ணத்தில் இருந்து ஒருவரை நாம் முழுமையாக மீட்க முடியும். தற்கொலை எண்ணங்களிலிருந்து மீள்வதற்கு சினேகாவின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தமிழ்நாடு அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104 க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.
மனிதனின் எல்லா பிரச்னைகளுக்கும் ஒரு தீர்வு உண்டு. தற்கொலை எப்போதும் சரியான தீர்வாகாது என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். நாம் மனதிற்கு தற்கொலை எண்ணம் தோன்றும் போது மனதிற்கு பிடித்த நல்ல விஷயங்களில் மனதை செலுத்துவதால் தற்கொலை எண்ணங்களைத் தவிர்க்க முடியும். மன அழுத்தத்தை எதிர்கொண்டு பிரச்னைகளின் தீர்வை நோக்கி தன்னம்பிக்கையுடன் முன்னேறினால் சாதனைகளை வசப்படுத்தி வாழ்வில் மேன்மேலும் உயரலாம்.