ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இயங்கிவந்த தனியார் ரசாயன தொழிற்சாலையில் இன்று அதிகாலை ஸ்டைரீன் வாயு கசிந்து விபத்து ஏற்பட்டதில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஸ்டைரீன் வாயுக் கசிவு காரணமாக அப்பகுதியிலுள்ள கிராம மக்களுக்கு கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்குக் கண், தோல், மூக்கு ஆகியவற்றில் எரிச்சலும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "விசாகப்பட்டினம் அருகேயுள்ள ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து பலர் உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இது எனக்கு வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்கள் குணமடையவும், அனைவரின் பாதுகாப்புக்காகவும் பிரார்த்தனை மேற்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.