உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஊழலில் ஈடுபட்டுள்ளார்கள் என 2009ஆம் ஆண்டு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் பதிவிட்ட ட்வீட்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் மீது நீதிமன்ற வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று (ஆகஸ்ட் 25) நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.
அந்த விசாரணையின்போது நீதிபதி அருண் மிஸ்ரா, ''இந்த வழக்கிற்கு குறைந்தது நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரையில் விசாரணை தேவை. ஆனால், எனக்கு நேரம் குறைவாக உள்ளது. இது விசாரிக்கப்பட வேண்டுமா என்பது குறித்தான வழக்கு அல்ல. நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை குறித்த வழக்கு. மக்கள் நீதிமன்றத்தைத் தேடி நம்பிக்கையுடன் வரும்போது, அந்த நம்பிக்கை அசைக்கப்படுவது அறிந்தால் ஏற்படும் பிரச்னை பற்றியது'' என்றார்.