முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு ஆகஸ்ட் 10ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லி கான்ட் பகுதியிலுள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவருக்குக் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுபற்றி, அவரது மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி, தனது ட்விட்டர் பக்கத்தில், அவரைப் பற்றி உருக்கமான ட்வீட் ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
அதில், 'கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி எனது தந்தைக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அந்த நாள் எனது வாழ்விலேயே மிகவும் மகிழ்ச்சியான நாள். சரியாக ஒரு ஆண்டிற்குப் பிறகு, இந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி அவர் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. எனது தந்தைக்கு எது சிறந்ததோ, அதை கடவுள் செய்வார். அதே நேரம் இன்பத்தையும் துன்பத்தையும் ஒருபோல அனுபவிக்கும் வலிமையை கடவுளே, எனக்கு வழங்க வேண்டும். உங்கள் அனைவரின் அக்கறைக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிரணாப் முகர்ஜியின் (84) உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு மூளை ரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பை நீக்குவதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது உயிர் பாதுகாப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
இதையும் படிங்க:முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கவலைக்கிடம்!