பரிக்கரின் மறைவு
கோவா முதலமைச்சராக இருந்த மனோகர் பரிக்கர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். 21 குண்டுகள் முழுங்க அரசு மரியாதையுடன் அவருக்கு இன்று இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. தற்போது அம்மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக பொறுபேற்பது யார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகராக உள்ள பிரமோத் சாவந்த், அடுத்த முதலமைச்சராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
கோவா சட்டப்பேரவை எண்கள்
மனோகர் பரிக்கரின் மறைவுக்குப் பிறகு கோவா சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 4 தொகுதிகள் காலியாக உள்ளன. மிதமுள்ள 36 தொகுதிகளில் காங்கிரஸிடம் 14 எம்எல்ஏக்களும், பாஜகவிடம் 11 எம்எல்ஏக்களும் உள்ளன. மஹாராஷ்டிராவடி கோமன்டக் கட்சி, கோவா முன்னணி ஆகிய கட்சிகளிடம் தலா 3 எம்எல்ஏக்கள் உள்ளன. தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் 1 எம்எல்ஏவும், 3 சுயட்சை எம்எல்ஏக்களும் உள்ளனர்.
ஆட்சி அமைக்க உரிமை கோரிய காங்கிரஸ்
கோவாவில் பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மஹாராஷ்டிராவடி கோமன்டக் கட்சி மற்றும் கோவா முன்னணி ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் அங்கு ஆட்சியமைத்து வருகிறது. பாஜக எம்எல்ஏ பாண்டுரங் மதுகைக்கர் மருத்துவமனையில் உள்ளதால் அவரால் வாக்கெடுப்பில் கலந்துகொள்ள முடியாது என்று கூறப்படுகிறது. இதனால் நேற்று முன் தினம் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோவா காங்கிரஸ் ஆளுநரிடம் உரிமை கோரியது.
தீவிரம் காட்டும் பாஜக
மனோகர் பரிக்கரின் மறைவுக்குப் பிறகு அம்மாநிலத்தில் புதிய முதலமைச்சரைத் தேர்வு செய்வது குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பாஜக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மஹாராஷ்டிராவடி கோமன்டக் கட்சியைச் சேர்ந்த சுதின் தவலிக்கரும், பாஜக எம்எல்ஏ விஷ்வஜித் ரானேவும் முதலமைச்சர் போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாஜக நேற்றிரவு கூட்டணிக் கட்சிகள் மற்றும் சுயட்சை எம்எல்ஏக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
தொடர்ந்து இன்று மாலை கூட்டணிக் கட்சிகளுடன் பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சரும் அக்கட்சி மூத்த தலைவருமான நிதின் கட்காரி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். கோவா தலைநகர் பனாஜியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமித்ஷா, "இது தொடர்பாக நிதின் கட்காரி அனைத்து தரப்பிடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். கோவாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும். அதன்பின் ஆளுநரை சந்தித்திப்போம்" என்று தெரிவித்தார்.