தேசியத் தலைநகர் பகுதியில் காற்றின் தரம் கடந்த சில ஆண்டுகளாகவே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள விவசாயிகள், விவசாயக் கழிவுகளை எரிப்பதே டெல்லியில் காற்று மாசு ஏற்பட முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவதால் டெல்லியில் வெறும் நான்கு விழுக்காடு மட்டுமே காற்று மாசு அதிகரிக்கிறது. மீதமுள்ள 96 விழுக்காடு, உள்ளூர் காரணிகளான தூசி, கட்டுமானப் பணிகள், குப்பைகளைக் கொட்டுதல், கட்டட இடிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றால் ஏற்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், காற்று மாசு குறித்து கண்காணிக்க 50 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் டெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆராய்ந்து இரண்டு மாதத்திற்குள் அறிக்கை சமர்பிக்கவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.