அந்தமானில் உள்ள போர்ட் பிளேயர் விமான நிலையத்திற்கு ஆண்டுதோறும் 18 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால், தற்போது புதிதாக கட்டப்பட்டுவரும் ஒருங்கிணைந்த முனைய கட்டடம் மூலம் ஆண்டுக்கு 50 லட்சம் பயணிகள் வந்து செல்ல இயலும் எனக் கூறப்படுகிறது. சுமார் 700 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுவரும் இந்தக் கட்டடம் சிப்பி வடிவில் அமையவுள்ளது எனக் கூறப்படுகிறது.
போர்ட் பிளேயர் விமான நிலையத்தில் புதிய முனையம் அமைக்கும் பணி தீவிரம்!
அந்தமானின் போர்ட் பிளேயர் விமான நிலையத்தில் புதிய முனையம் அமைக்கும் பணி விரைவில் முடிவடையும் இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "போர்ட் பிளேயரில் விமான நிலைய முனைய கட்டடம் அமைக்கும் பணி 65 விழுக்காடு நிறைவடைந்துள்ளது. அடுத்த ஆண்டு பிற்பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்கு இந்த நிலையம் கொண்டுவரப்படும். இது, தரைத்தளம், முதல் தளம், மேல்தளம் என்று மூன்று அடுக்குகளாக அமைக்கப்பட்டுவருகிறது.
இதில், தரைத்தளத்தில் தொலைநிலை வருகை, புறப்பாடு மற்றும் சேவை பகுதிக்காகவும், மேல்தளம் புறப்படும் பயணிகளுக்கான நுழைவு வாயில் மற்றும் வருகை பயணிகளுக்கு வெளியேறும் வாயிலாகவும், முதல் தளம் சர்வதேச பயணிகளுக்காகவும் பயன்படுத்தப்பட உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.