இந்தியாவின் பல மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிற கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வேகமாக பரவி வரும் இதைத் தடுக்க மே 3ஆம் தேதி வரை முழுமையான முடக்கத்தை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
மேலும், வைரஸ் தொற்றின் சமூகப் பரவலை தடுக்க மக்கள் பொது இடங்களில் கூடவும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், ஆலைகள், வணிக நிறுவனங்கள், சிறு குறு நிறுவனங்கள், சாலையோர கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
கரோனா வைரஸின் அச்சுறுத்தல் சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் பாதித்திருந்தாலும், நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் ஏழை, எளிய மக்களை அதிகம் பாதித்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் இந்த இடம்பெயர்ந்த கூலித் தொழிலாளர்கள், நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள தங்களது சொந்த கிராமங்களை நோக்கி சிறு குழந்தைகளை, வயதானவர்களைத் தோளில் சுமந்து கொண்டு, நகரத்தை விட்டு வெளியேறினர். ஏறத்தாழ 8 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்ததாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, நாள்தோறும் கிடைக்கும் தினசரி கூலியை வைத்துகொண்டு வாழ்வை நகர்த்தி வந்த கூலி தொழிலாளர்கள், முழுமையான முடக்கத்தால் வேலைவாய்ப்பை இழந்த நிலையில் தங்களின் சிறு சேமிப்பும் தீர்ந்துவிட்டதால் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்குவதற்கு கூட பெரும் சிக்கல் எழுந்துள்ளது. கூலி தொழிலாளர்களின் பட்டினிச்சாவுகள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிராவின் சந்திரப்பூர் மாவட்டத்தை அடுத்துள்ளது ஜூனோனா பகுதியில் ஊரடங்கு உத்தரவால் வேலைவாய்ப்பை இழந்த நிற்கும் கூலித் தொழிலாளர் மயேஷ் நிசாத்தும் அவரது குடும்பத்தினரும் பசிக்கொடுமையில் இருந்து உயிர் தப்பி பிழைக்க மொஹ்புல் என்ற காட்டுப்பூவை மட்டும் சாப்பிடும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 25 நாள்களாக வேலை வாய்ப்பின்றி, வாழ்வாதாரத்திற்குறிய பொருள் ஆதாரமும் இன்றி தவித்து வரும் மயேஷ் நிசாத், அவரது குடும்பத்தினரை காப்பாற்ற அதிகாலையில் எழுந்து, அவரின் பகுதிக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று உயிருக்கு அச்சுறுத்தல் மிகுந்த சூழலில் மொஹ்புல் மலரை சேகரித்து வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். வீட்டிற்கு திரும்பியதும், அதைக் கொதிக்கவைத்து அதையே அவரும் அவரது மனைவி, மகனும் சாப்பிட்டு வருகின்றனர்.
ஏறத்தாழ 70 விழுக்காடு தொழிலாளர்களின் வாழ்விடமாக இருக்கும் இந்த ஜூனோனா பகுதியில் பெரும்பாலான மக்கள் கூலித் தொழிலாளர்களாகவே உள்ளனர். அவர்களில் பலரும் இதே வழியில் தமது பசியைப்போக்கிக் கொள்ள வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.